Saturday, March 28, 2015



பாட்டன் ,பூட்டன் பெருமையை பறைசாற்றியபடி நிமிர்ந்து நிற்கிறது அந்த வீடு. வாசலில் அச்சிறுமி விளையாடிக்கொண்டிருக்கிறாள். அம்மாவும் விஜயாக்காவும் வெளித் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். விஜயாக்கா, விளையாடிக்கொண்டிருந்தவளிடம் சொல்கிறாள், அங்கபாரு உங்க அப்பா கடைக்குள்ள போறாரு. குடிக்கத்தான் போறாரு. அவள் பார்க்கிறாள். அங்கிருந்து பார்த்தால் பஸ் ஸ்டாப், கொடிக்கம்பம் ,அதை ஒட்டிய ஹோட்டல் எல்லாம் தெரியும்.அப்பா உள்ளே தான் போகிறார். முன்பக்கம் சாப்பாடு. பின் பக்கம் சாராயம். 

அவளுக்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அப்பாவைக் குடிக்கவிடக்கூடாது. ஓடு ஓடு .. அவள் தன் அரைப்பாவாடை பறக்க ஓடுகிறாள்.ஓட்டத்தில் அத்துனை வெறி. வேங்கையெனப் பாய்ந்து கடைக்குள் நுழைகிறாள், கண்ணில் படும் யாரும் மனதில் பதியவில்லை. அப்பா எங்கே ? அப்பா எங்கே ? மனம் பரபரக்க மேசைகள் கடந்து , சமையலறை நுழைந்து , ஒரே மூச்சில் புழக்கடைக்கு வந்துவிட்டாள். அதோ அப்பா. 

அங்கே ஒருவர் ஸ்டூலில் ஒரு குடம் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.அவரைத் தெரியும். அவர் பெயர் கணேசனோ, முருகேசனோ. அவர் மகன் அவள் படிக்கும் பள்ளியில் தான் படிக்கிறான். அருகில் ஓடி ,அப்பா வாங்க வீட்டுக்கு போகலாம் என்கிறாள் அவள். அவளை அவர்கள் இருவருமே அங்கே எதிர்பார்க்கவில்லை. நீ ஏம்மா இங்க வந்த ? போ வீட்டுக்கு போ.. இல்ல நீங்களும்  வாங்கப்பா போலாம் ,அவள் அப்பாவின் கையைப் பிடித்து இழுக்கிறாள். இப்போது அப்பாவுக்கு எரிச்சல் வரத் தொடங்குகிறது . நீ போ , நீ குடுப்பா என்று குடத்தில் கவனம் கொள்கிறார் அப்பா. இனி அப்பாவிடம் கெஞ்சிப் பிரயோஜனம் இல்லை. ஏங்க , அப்பாவுக்கு குடுத்தீங்கனா குடத்தை போட்டு உடைப்பேன், அப்பாவுக்கு குடுக்காதீங்க, சாராயம் வித்து எல்லாரையும் ஏன் இப்படி சாவடிக்கிறீங்க ? அவள் ஆத்திரத்துடன் ஏதேதோ பேசுகிறாள். வயசுக்கு மீறிய பேச்சு. ஆனால் அந்த குழந்தைமை வயதுதான் அவள் பலம் , தைரியம் அங்கே. அவர் பதில் தெரியாமல் தடுமாறுகிறார். அண்ணா , வீட்டுக்கு போண்ணா .. பிள்ள திட்டுதுல்ல .. பாப்பா நீ கூட்டிட்டு போ ..அவர் அப்பாவை அனுப்ப முயல்கிறார். அப்பாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. டேய் குடுடா ,பிள்ள கெடக்குது . அண்ணா வீட்டுக்கு போயிட்டு அப்புறமாச்சும் வாண்ணா. இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்க அவள் இருவரிடமும் மன்றாடிக் கொண்டிருக்கிறாள், எச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அந்த எளிய சிறுமி அவர்கள் இருவருக்குமிடையே ஒரு இரும்புச் சுவரை அவசரமாக எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறாள். இப்போது அப்பா அவள் கையை ஒரு கையால் இறுகப்பற்றுகிறார் , மறுகையால் அந்த சிகப்பு நிற பிளாஸ்டிக் டம்ளரை அந்த மனிதனிடமிருந்து வாங்குகிறார். அவள் கையை உதற முயல்கிறாள். பிடி இறுகுகிறது. அப்பா , அவளின் நேசத்திற்குரிய அப்பா, அவளின் பிஞ்சுக் கைகளை ஏந்தி கண்களில் ஒத்திக் கொண்டு ஒரு நாளில் நூறு முறை முத்தமிடும் அப்பா , தனது தடித்த உதடுகளை டம்ளரில் பொருத்தி ( அந்த உதடுகள் , இவள் கண்ணாடி பார்க்கும் தோறும் அப்பாவை நினைவூட்டுகின்ற தடித்த உதடுகள் )  அந்த மூத்திரத்தைக்  குடிக்கத் தொடங்குகிறார். அம்மா, சாராயத்தை எப்போதும் மூத்திரம் என்றே சொல்வாள். உண்மையில் அப்பா, மூத்திரத்தைக்  குடிக்கும் முகபாவனையுடன் தான் அதைக் குடித்து முடித்தார். கடைசி சொட்டு உதட்டிலிருந்து கீழே விழுகிறது.

அதள பாதாளத்தின் விளிம்பைப் பற்றியபடி தொங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் கைகளைப் பற்றியபடி இச்சிறுமி தவித்திருக்கிறாள். அப்பா, அந்த மெல்லிய கைகளை நழுவவிட்டபடி அதள பாதாளத்தில் விழுந்து மெல்ல கீழ்நோக்கிப் போகிறார்..மீண்டும் மீண்டும் .. எப்போதும் தோற்று விழுகிறார் அப்பா, கூடவே அவளும். 

                                                           *******************

No comments:

Post a Comment