Wednesday, February 4, 2015



இன்றைய நாள்
வழக்கமானதொரு நாளாக தொடங்க எத்தனித்து கொஞ்சம் விசித்திரம் காட்டி ஆரம்பித்தது .
எல்லா நாட்களையும் போல இன்றைய நாளும் பரபரப்பாகவே தொடங்கியது .பரபரக்கும் நாளை மெலடிப் பாடல்களுடன் தொடங்குவது என் வழக்கம் .இன்றும் அப்படியே இளையராஜாவின் இன்னிசை சாம்பிராணிப் புகை போல வீடெங்கும் மெல்லியதாய் பரவி
நெகிழ்த்திக் கொண்டிருந்தது .
நேரம் 7 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது .இன்னும் அரை மணியில் பள்ளி வேன் வந்துவிடும் .சாம்பார் பொடி பொட்டலத்தைக் கத்தரிக்க கத்தரிக்கோலை தேடுகிறேன் .வழக்கம் போல கிடைக்கவில்லை .இந்த பிள்ளைகள் இப்படித்தான் எடுத்த பொருளை அதனிடத்தில் வைப்பதில்லை .சரி தேடிக்கொண்டிருக்க நேரம் இல்லை .காய் நறுக்கும் கத்தியை எடுக்கிறேன் .பொட்டலத்தை ஓரத்தில் அறுக்க முயல்கிறேன். அவசரம். சுருக்கென்று ஒரு வலியுடன் விரலை கீறித்திறந்திருக்கிறது கத்தி .
கொஞ்சமும் பதற்றத்தை தந்துவிடாத செந்நிற உதிரம் . விரலை அழுத்திப்பிடித்தபடி திரும்புகிறேன் . சமையல் மேடையில் ஓரத்தில் கத்தரிக்கோல் அமைதியாக சாய்ந்திருக்கிறது .ஒரு நிமிடம் முன்பு என் கண்ணிலிருந்து மறைந்த அது அடுத்த நிமிடத்தில் உருப்பெற்றிருக்கிறது . அப்படி என்றால் நடந்தது ஏற்கனவே முடிவான ஒன்றா ? நடப்பது அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றால் நம் செயல்கள் அனைத்தும் அதை நோக்கித்தானா ?!
கத்தியை எடுத்துப்பார்த்தேன் . எந்தவித தடயமும் இன்றி மௌனமாக இருந்தது அது . சமரசம் ஏதும் இன்றி தன் கடமை ஒன்றே குறி என்றிருக்கும் அதன் நிலையும் ஜென் நிலை தானா ? மெல்லிதாய் புன்னகைத்தேன் .கத்தியை எடுத்து முத்தமிட்டேன் . சில்லென்ற அதன் உடலில் வெங்காய வாசனை . முத்தம் வெறும் முத்தமாக ஒருபோதும் இருப்பதில்லை . கண் லேசாக கலங்கியது . அப்பா முகம் நொடியில் தோன்றி மறைந்தது .
விரலை அழுத்திப்பிடித்தபடி சமையலை தொடர்கிறேன் . விரல்கள் ஒரு பரத நாட்டிய முத்திரையுடன் இருக்கிறது . சிறு வயதில் நாட்டியம் கற்கும் ஆசை இருந்தது . அதற்கான சூழல் இல்லை . சித்தப்பா மகள் கற்றுத்தந்த ஒரு சில அசைவுகள் மட்டுமே இன்று வரை அறிந்தது . மற்றபடி சினிமா பாடல்களுக்கு ஆடுவதை யார் தடுக்க இயலும் ?! நான் நன்றாக ஆடுவேன் என்பது கடைசி வரை அப்பாவுக்கு தெரியாது . அம்மா என்னை உள்ளும் புறமும் அறிந்தவள் .
அழுத்திப்பிடித்திருந்த விரலை மெல்ல திறந்து பார்த்தேன் . இரத்தம் நின்றிருந்தது .கோபம் கொண்ட காதலனை அல்லது கதறி அழும் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அழுத்துகையில் மெல்ல இயல்பு நிலை திரும்புமே அப்படி என் கட்டை விரலின் சமாதானத்தில் ஆள்காட்டி விரல் அமைதிகொண்டு உதிரம் நிறுத்தியிருந்தது .
சஞ்சுவின் குரல் என்னை மீண்டும் கொண்டுவந்து சமையலறையில் இறக்குகிறது . அடுப்பைப் பார்க்கிறேன். சாம்பார் தயாராகிவிட்டிருக்கிறது . சாம்பாரில் சேர்ப்பதற்காக நறுக்கி வைத்த கேரட்டும் ,பீன்சும் அப்படியே தட்டில் இருக்கிறது . கத்தரிக்காய் மட்டும் தன்னந்தனியாக சாம்பாரில் மிதந்தபடி அலுத்துக்கொள்கிறது அப்படி எங்கதான் நினைப்பு போகுமோ உனக்கு!? என்று.மீண்டும் புன்னகை.
ஒரு துண்டு மாமிசத்திற்கு சுற்றி மொய்த்துத் தீர்க்கும் எலிகளென ஒரு நிகழ்வைச் சுற்றி மொய்த்துக் கிடக்கும் இந்த நினைவுகளை எப்படி விரட்ட ? பேக்பைப்பர்க்காரனைப் போல் இசைத்தபடி அழைத்துச்சென்று பள்ளத்தில் தள்ளி விடலாமா ?!

                                                           ******

No comments:

Post a Comment