Sunday, February 1, 2015



தொலைக்காட்சியில் 'மண் வாசனை' பட பாடல் பொத்தி வச்ச மல்லிக மொட்டு போய்க்கொண்டிருக்கிறது. வகிடெடுத்து படிய வாரிய தலையும், முழங்கை வரை நீளும் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக பாண்டியன் என் மாமன்களை நினைவு படுத்துகிறார். அப்பாவுடைய தங்கைகள் 3 பேர்க்கும் சேர்த்து மொத்தம் பிள்ளைகள் 7. ஆக 7முறை மாமன்கள். தாய்மாமன்கள் 3.
இரண்டு அத்தைகள் உள்ளூரிலேயே கட்டிக்கொண்டதால் முறை மாமன்கள் அன்றாடம் சந்திக்கக்கூடியவர்களாக இருந்தனர். அண்ணனின் நண்பர்கள் யாரையும் படி ஏற விடாத என் அப்பா மாமன்களுடன் மிகுந்த நட்போடு இருப்பார். சின்ன வயசில் திருவிழாவில் மஞ்சள் நீரை சொம்பில் எடுத்துக்கொண்டு மாமனை தேடி அலைந்ததும், ரவி மாமா, நீரை பிடுங்கி என் மேல் மொத்தமாக கொட்டி விட அழுதுகொண்டே நான் வீட்டுக்கு வந்ததும் இன்றும் மஞ்சள் மணம் மாறாமல் இருக்கிறது. கல்லூரி வரை படித்த ரவி மாமா ரொம்ப சாந்தம், அன்பு நிறைந்தது.
சூரி மாமா சைக்கிள் ரேஸில் எப்போதும் முதலில் வரும். வருடா வருடம் வெற்றி பெற்ற மாமனுக்கு சோடா வாங்கிக்கொண்டு பெருமையோடு நான் ஓடுவதும் தவறாது. மாநிறமும், முட்டை கண்ணும், சரிந்து விழும் அடர்ந்த தலை முடியும், அண்ணாந்து சிரிக்கும் போது தெரியும் வரிசையான பல்லுமாக சூரி மாமாவின் முகம் மிகவும் இணக்கமானது.
சந்திரன் மாமா ஒரு சிடு மூஞ்சி. சும்மா ஏதாவது மிரட்டிக்கொண்டே இருக்கும். சிவப்பாக,உயரமாக அழகாய் இருக்கும் அது முகத்தில் சிரிப்பை பார்ப்பதே அபூர்வம். முகத்தை எப்போதும் சீரியசாக, பெரிய மனுஷ தோரணையில் வைத்துக்கொண்டே திரியும்.
ராஜா மாமா எல்லோருக்கும் கடைசி. படபடவென்று பேசும். என் அப்பாவோடு பஞ்சாயத்து வேலைகளுக்கு கூட அலைவது அது தான். ஜடையை ஏன் இப்படி தூக்கி கட்டி இருக்க? நல்லாவே இல்ல, சோறு சாபிடுறியா இல்லையா இவ்ளோ ஒல்லியா இருக்க, சமைக்க எப்போ கத்துக்குவ என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கும். பேசும்போது சுஜி சுஜி என்று 100 சுஜி சொல்லிவிடும்.
பெரிய அத்தை பிள்ளைகளும், தாய் மாமன்களும் வேறு ஊரில் இருந்தாலும் விடுமுறைகளில் அவர்கள் வீட்டில் கழியும் நாட்கள் மிக இனிமையானவை . பெரிய அத்தை பிள்ளைகளும், அம்மாவின் சகோதரர்களும் வயதில் ரொம்ப பெரியவர்கள். சினிமாவுக்கு கூட்டிப்போவது , தின்பண்டம் வாங்கி வருவது என்று அவர்களின் அன்பில் தந்தைமையை காண முடியும்.
இத்தனை மாமன்களிடையே வளர்ந்த என் வாழ்வு அவ்வளவு பாதுகாப்பானதாக இருந்திருக்கிறது. ஒரு நொடிப்பொழுதும் அவர்கள் எல்லை மீறியதில்லை. உரிமையை தவறாக பயன்படுத்தியத்தில்லை. கண்ணியம் தவறாத அவர்கள் அன்பு இன்று வரை மாறாதிருக்கிறது. உறவுகள் சூழ வாழ்ந்திருத்தல் சுகம். அதுவும் மண் வாசனை மணக்கும் கிராமத்தில்..
[ நான் பாடலை பார்த்து மேற்சொன்ன இவ்வளவும் நினைத்து feel பண்ணிக்கொண்டிருக்கிறேன், சஞ்சு, பாண்டியனைப் பார்த்து யாரும்மா இந்த அங்கிள் லூசு மாதிரி இருக்காங்கன்னு சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை தரை இறக்கிவிட்டாள் ]

No comments:

Post a Comment