Wednesday, May 28, 2014

அதிர்ந்த கனவின் ஒற்றையடி நீள்பாதை




அங்கிருந்து
திரும்பிய நாளில் தான்
முடிவு செய்தேன்
என் நாவை
முடமாக்குவது என்று

கால் உடைக்கப்பட்ட நாவு
வன்மம் வளர்த்தது

கூன் விழுந்த என் முகத்தில்
அது
ஓயாமல் காறி உமிழ்ந்தது

யாரும் அறியாமல்
துடைத்துக்கொண்ட முகத்தில்
நான்
ராஜக்களையை ஏற்ற முயன்றேன்

என் இதயத்துடனான
முடநாவின் முணுமுணுப்பில்
ஏதோ சதி இருப்பதாய்
அஞ்சினேன்

நடுநிசிப்பொழுதொன்றில்
அது
என் தலைமயிரை சிரைக்க
முயல்கையில்

இதயத்தைக் கொன்றுப் புதைக்க
நான் துணிந்திருந்தேன் 

***
நன்றி: யாவரும்.காம் 

Thursday, May 8, 2014

தேவஸ்வரம்






அவள் வெகு தொலைவு கடந்து வந்திருக்கிறாள். விரட்டப்பட்ட 

ஒரு அநாதை நாய்க்குட்டியைபோல திசைகள் அற்று 

ஓடிக்கொண்டிருக்கிறாள். கால்களில் வழிந்தபடி 

இருக்கும் உதிரம் முட்களின் இரக்கமற்ற கூர்மையை 

எழுதிக்காட்டுகிறது.இந்த கான்க்ரீட் உலகத்தின் விரைத்த, நிலைத்த 

விழிகள் அவளை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அவள் ஓடுகிறாள். 

உருகும் தார் வாசனைக்கு அஞ்சி, பச்சையம் தேடி ஓடுகிறாள்.



அவளின்  மெலிந்த  கால்கள்  ஓர்  அடர்ந்த வனத்தின் வாசலில் 

அவளை கொண்டுவந்து சேர்த்திருந்தது. பாதைகள் அறியா 

அவ்வடர்ந்த வனத்தில் ஒரு பூனையின் தயக்கத்துடன் அவள் 

தனக்கான பாதையைத் தேடிக்கொண்டிருந்தாள். தடங்களைத் தேடி பாதங்கள் அலைபாய்ந்துக் கொண்டிருந்ததொரு உச்சிப்பொழுதில்தான் அவள் அவனைக் கண்டாள். தடித்த பலா மரத்தின் வேர்களில் அமர்ந்து அவன் பலாச்சுளையைப் புசித்துக்கொண்டிருந்தான். கனிந்த பலாச்சுளையின் சாறு இதழோரம் வடிந்து அவன் மார்பில் சொட்டிக்கொண்டிருந்தது. புடைத்து திரண்ட ஒரு மரத்தில் கோடாரியால் உண்டாக்கிய ஒரு சிறு பிளவிலிருந்து பொன்னிறக்கோந்து வடிவதுபோல் அது மிக மெதுவாய் வடிந்துகொண்டிருந்தது.



ஏற்கனவே அவன் அருகில் அமர்ந்துவிட்ட அவள் மனம் அவளை அருகில் வரச்சொல்லி கை அசைக்கவும் அவள் மெல்ல நகர்ந்து அவனை நெருங்கினாள். நிமிர்ந்து நோக்கிய விழிகளில் “ தெறிக்கும் இரு சூரியன்கள்”.

அவன் சொன்னான் , “ வழிதவறிய காட்டு மானின் மருண்ட விழிகள் உனது” என்று.



ஒரு மேய்ச்சல் சிறுவனின் உடல்மொழியோடு அவன் அந்த வனத்துடன் உறவாடிக்கொண்டிருந்தான். வனத்தின் வாசல்வரை அவளுக்கு வழித்துணையாக வருவதாக அவன் சொன்னான். அவள் பயணம் அங்கே முடிந்துவிட்டதாக அவள் பதில் அளித்தாள். அவன் அவள் கண்களைப் படிக்க முயல்கையில் விழி வாசல், அவள் கடந்து வந்த பாதை முழுவதையும் திறந்து காட்டியது. அவள், அவன் நிழலில் இளைப்பாறும் தனது விருப்பத்தை தெரிவித்தாள்.



அவன் கரம் அவளை நோக்கி நீண்டது. அவள் அதைப்பற்றிக்கொண்டாள்.

ஆணிவேரின் ஈரமும், வாசனையும் அதில் இருந்தது. மரங்களினூடே ஒரு தும்பியின் லாவகத்துடன் அவன் பறந்துகொண்டிருந்தான். அவளையும் அவன் சிறகுகளில் ஏற்றி இருந்தான்.



அவர்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு சிற்றாற்றின் கரை. அவன் அவளைப் பார்த்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டபடி புன்னகைத்தான். பின் மண்டியிட்டு அமர்ந்து மணலை கைகளால் தோண்டத்தொடங்கினான். அறியும் ஆவலோடு அவளும் அவனோடு சேர்ந்து மண்ணை வாரி வெளியில் போட்டுக்கொண்டிருந்தாள். கசியத்தொடங்கியிருந்த ஈரம் அவர்கள் இருவர் கைகளையும் நனைக்கவும் “ ஹே “ என்று சின்னதாய் ஒலி எழுப்பியபடி அவன் வேகம் கூட்டினான். அப்போது அவர்கள் கைகளுக்குப் பாசி படர்ந்த வெண்ணிற மணிகளை ஒத்தச் சொற்கள் தட்டுப்படத்தொடங்கின. அவன் சொன்னான், ”'நான் தினமும் இங்கு வருவேன்,எண்ணிலடங்கா எனது சொற்களை இங்கே புதைத்துவிட்டு மௌனத்தைப் போர்த்தியபடி அமர்ந்திருப்பேன். பின் இவ்வாற்றங்கரை புங்கைமரக்கிளையில் மூக்குரசியபடி இருக்கும் ஜோடிக்கிளிகளின் ஒலியை கொஞ்சம் சேகரித்துக்கொண்டு திரும்புவேன் ” என்று. .



இருவரும் கை நிறைய சொற்களை அள்ளிக்கொண்டு திரும்பத்தொடங்கினார்கள். மெளனமாக நடந்துகொண்டிருந்தவனின் முதுகில் கொஞ்சம் சொற்களை அள்ளி அவள் வீசினாள். அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பிய அவனிடம் நாக்கைத் துருத்திக்காட்டிச் சிரித்தாள் அவள். முகம் எல்லாம் மின்னல் தெறிக்க , கீழ் உதட்டைக் கடித்தப்படி அவன் கையில் இருந்த சொற்களை அவள் மீது அள்ளி வீசினான். அவள் சிரித்தப்படி விலகி ஓடினாள். அவன் துரத்திவந்தான்.  மாறி மாறி துரத்தியபடி சொற்களை ஒருவர்மேல் ஒருவர் வீசி விளையாடிக் களித்திருந்தார்கள் . மான் கூட்டம் ஒன்று தங்கள் மேய்ச்சலை நிறுத்திவிட்டு தலை உயர்த்தி அவர்களை வேடிக்கைப் பார்த்திருந்தது.



யானையின் அடிவயிற்றை ஒத்த பருத்த பாறைமேல் அவர்கள் இருவரும் வான் பார்த்துப் படுத்திருந்தார்கள் . சூரியன் குளிரத்தொடங்கி இருந்த அந்த அந்திப்பொழுதில், “ அருவியின் ஓசையை என்னுள் கேட்கிறேன்,ஒற்றைப் பனித்துளி ஒன்று என் உச்சந்தலையில் இறங்குகிறது, இன்று தான் நிகழ்கிறது இது ” என்று அவன் சொன்னான். பிறகு மெல்லமாய் உன் பெயர் என்ன என்று வினவினான். அவள் சொன்னாள்  “ வன உயிர்கள் பெயர் அற்றவை “.  மலர்ந்து எழுந்த அவன், அவள் இரு பாதங்களையும் மடியில் எடுத்துக் கிடத்திக்கொண்டான். அவள் தன் காயங்களைக் காட்டினாள். இவைகள் என்றும் மறையாது என்றாள். வழித்தடங்களுக்குப் பழகிய உன் பாதங்கள் நீ கடந்து வந்த பாதையை மறக்கும் நாளில், உன் காயங்கள் மறையும். நீயும் ஓர்வன உயிர் ஆவாய் என்றான் அவன்.



அடர்ந்த அயனி மரங்களை மூங்கிலால் இணைத்து அவளுக்காக ஒரு பரண் அமைத்தான். மந்திகள் தங்கள் குட்டிகளுக்குப் பாதாம் கொட்டைகளை உடைத்து உண்ணப் பழக்குகையில் அவன் அவளுக்கு வனத்திடமிருந்து உணவைப் பெரும் முறையை சொல்லிக்கொடுத்தான். உண்ணத்தகுந்த கிழங்குகள்,தவிர்க்கவேண்டிய கனிகள், காதுகொடுக்க வேண்டிய ஒலிகள், கவனிக்கவேண்டிய கால்தடங்கள் என்று கானகத்தின் பக்கங்களை அவனோடு சேர்ந்து அவள் கொஞ்சம் கொஞ்சமாய் வாசிக்கத்தொடங்கினாள்.



அவள் உதிரம் கண்ட நாளில், வனம் அவனை புதுவிதமாய் அறிந்தது. இரண்டு மடங்கு விழிப்புக் கொண்டவனாக ஆனான் அவன். ஒரு தாயின் பரிவை கணநேரத்தில் தன்னுள் கொண்டுவந்திருந்தான். காய்ந்த சருகுகளையும், விறகுகளையும் இட்டு தீ மூட்டி விடிய விடிய விழித்திருந்தான். அவன் கண்கள் தீக்கங்கு போல் சிவந்து ஒளிர்ந்தது. அவள் உதிரம் தோய்ந்த நிலமெங்கும் சாம்பல் கலந்த மணலை இட்டு மூடினான். உதிர வாடையை  விலங்குகள் அறியாதிருக்க அத்துனை சாகசங்களையும் செய்து முடித்தான். அவனே வன ராஜா .அவனே சிறந்த தோழன்.



அது, வானம்  மஞ்சள்பூசிய இளமாலை நேரம். அவன் அவள் கைப்பற்றி இழுத்துக்கொண்டு ஓடினான். தூரத்தில் உடலெங்கும் மிக நேர்த்தியாக வரையப்பட்ட கோடுகளுடன் புலி ஒன்று வந்துகொண்டிருந்தது. மூச்சிரைக்க ஓடி ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் அவர்கள் ஒளிந்துகொண்டார்கள். அவன் முதுகுக்குப் பின்னால் அவள் குறுகி அமர்ந்திருந்தாள். அவள் தன் முன்னுடலை அவன் மேல் சாய்த்திருந்தாள். அது அவளுக்கு கொஞ்சம் தைரியம்  தருவதாக இருந்தது. அவள் நெஞ்சு படபடப்போடு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கொழுத்த புலி கொஞ்சம் தொலைவில் மேய்ந்துகொண்டிருந்த காட்டு எருமைக்கூட்டத்தை நின்று கவனித்து விட்டு, பின் அசிரத்தையோடு  ஒரு மர நிழலில் போய் படுத்துக்கொண்டது. அவன் சொன்னான் “ அதற்கு பசி இல்லை”.அவர்கள்  கொஞ்சம் ஆசுவாசம் கொண்டனர்.



அவள்  இன்னமும் அவன் முதுகோடு ஒட்டி இருந்தாள். ஜோடி ஆமைகளின் மிக மெல்லிய நகர்வை அவன் முதுகில் உணரத்தொடங்கிய  வேளையில் அவன் திரும்பி அவள் விழிகளைப் பார்த்து சொன்னான் “ உன் ஆயுதங்கள் பலம் பொருந்தியவை “.  கரிய இரு நாகங்கள் முத்தமிட்டு விலகுவதைப்போல அவள் தன் புருவங்களைச் சுருக்கி “ புரியவில்லை “ என்றாள். அவன் உதட்டோரம் நெளியும் குறும்பு புன்னகையுடன் ''உன் ஆயுதங்களால் என்னை புறமுதுகில் தாக்காதே. ஒரு வீரன், ஆயுதங்களை நெஞ்சில் சந்திக்கவே விரும்புவான் '' என்றான்.  நொடிப்பொழுதில் கூசிச் சிவந்த மலர்முகத்தை ஒரு கையில் மூடிக்கொண்டு அவன் நடுநெஞ்சில் மறு கையைப் பதித்து பின்புறமாய் அவனைத் தள்ளி விட்டுவிட்டு  எழுந்து ஓடினாள். அந்நிமிடத்தில் செந்நிற செம்பருத்தி மலர்கள் மலர்ந்து ஒளிரத் தொடங்கின.



அந்த வனம் மிகப்புதிய இரவை அன்று சந்தித்தது. அடர்ந்த மௌனம் மான்களை பதற்றம் கொள்ளச் செய்தது. யானைகள் இருப்பு கொள்ளாமல் தங்கள் உடல்களை முன்னும் பின்னும் அசைத்தபடி இருந்தன. பறவைகள் தங்கள் இணை சேராமல் விழித்திருந்தன. காற்று மூச்சை இழுத்துப் பிடித்தபடி நின்றிருந்தது. மரங்கள் துவண்டு தலை சாய்த்திருந்தன. அவனும் அவளும் எதிர் எதிர் பரண்களில் வானத்தை வெறித்திருந்தார்கள். அவர்கள் இருவரின்  மூச்சுக்காற்றுகளும்  பாம்புகள் சீறும் ஒலியைப்போல விடியல் வரை ஒலித்திருந்தன. என்றும் அறியா புழுக்கத்தை வனம் அன்று கண்டிருந்தது.



வனம், தன் உறக்கம் தொலைத்த இரவுக்குப் பின்பான பகல் அவர்களுக்கு மிக நீண்டதாய் இருந்தது. அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். பசியை முற்றிலும் மறந்திருந்திருந்தார்கள். மௌனம் இருவரையும் கவ்விப்பிடித்திருந்தது. மனங்கள் இரண்டும் ஒரு புள்ளியில் குவிந்திருந்தது. எப்போதும் அவள் இயல்பாய் பற்றிக்கொள்ளும் அவனது விரல்கள் அன்று இயல்பைத் தொலைத்திருந்தது. அந்த சின்ன நடுக்கம் அவள் விரல்களிலா? அவன்விரல்களிலா? அவர்கள் சொற்களைத் தோண்டி எடுத்த அந்த சிற்றாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். வழக்கமாக அவர்கள் நீராடும் இடம் அது தான். கண்கள் சந்திக்கத் துணிவற்று, அவள் அருகிலிருந்த வெண்ணிற காட்டுமல்லிப் பூக்களைச்  சேகரிக்கத்தொடங்கினாள். அவன் மரத்துண்டு ஒன்றை எடுத்துவந்து தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கத்தியைக்கொண்டு செதுக்கத்தொடங்கினான்.



கதிரவன் உச்சியை அடைந்த பொழுதில், கொஞ்சம் மரவள்ளிக்கிழங்குகளையும், கொய்யாக்கனிகளையும் கொண்டுவந்தான்அவன். அவர்கள் மர வேர் ஒன்றில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள். கொய்யாக்கனிகளே அவர்களின்  விருப்ப உணவாக இருந்தது. சூரியனின் கதிர்கள் அடர்ந்த மரங்களைக் கடந்து வந்து அவர்களைத் தழுவிவிடத் தவித்துக்கொண்டிருந்தது.  அவள், சேகரித்த காட்டுமல்லிப் பூக்களை  மாலையாகத் தொடுக்கத்தொடங்கினாள். அவன் வலிய தன் கரங்களை நீட்டி மிக மென்மையாய் அவள் இதழோரம் ஒட்டியிருந்த கொய்யா விதையை எடுத்தான். பின் எழுந்து சென்று ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டு மீண்டும் மரத்துண்டை செதுக்கத்தொடங்கினான்.



அந்த நாள் அவர்களின் பிரக்ஞை அற்று மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. கதிரவன் மறையத்தொடங்கிய அந்திப்பொழுதில் அவன் நீராடச் சென்றான். அவள் மலர்மாலையில் கொஞ்சம் நீர் அள்ளித் தெளித்துவைத்துவிட்டு அவனைப் பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்திருந்தாள். யானையின் நீராட்டம் நீங்கள் கண்டதுண்டா? கரிய அதன் தோள்களில்  நீர்த்துளிகள் சரிந்து தெறிக்கும் காட்சி கிளர்ச்சி மிகுந்தவை,  காண்போரின் உடலில் அதன் குளுமையை உணரச்செய்பவை.

“  நீர் என்பது வெறும் நீரல்ல. அது, காலங்களை தன்னிடத்தில் பொதித்து வைத்திருக்கிறது. அது நம் மனங்களுக்குத் தக்கபடி தன்னைப்  பிரதிபலிக்கவல்லது “

அவன் கரை ஏறிவந்து அவள் அருகில் அமர்ந்தான். அவள் எழுந்து, மெல்ல தன் பாதங்களை எடுத்து வைத்தாள். அந்த ஆறு அவளைக் கைவிரித்து அழைத்தது. புற்களும் கருகிவிடக்கூடிய மிக மிகுந்த வெம்மை அவள் மூச்சுக்காற்றில் ஏறி இருந்தது. அவள் தன்உடலை நீருக்குள் நழுவவிட்டாள். காலைப்பனியின் சிலுசிலுப்பை பெற்றிருந்த அந்த ஆற்றுநீர் அவள் உடலின் அத்துனை திசைகளிலும் மோதிச் சிலிர்த்தது. அவள் மெதுமெதுவாய் குளிரத்தொடங்கினாள்.



ஈரஉடை அசைய நடந்து வந்து அவன் சிலையாய் சமைந்திருந்த பாறைமீது அவன் தோள்உரசி அமர்ந்தாள் அவள். கடலும்,ஆறும் ஒன்றுசேரும் இடத்தைப்போல் குளுமையும் வெம்மையும், மோதி உரசிக்கொண்டது அப்போது. அவன் மெல்ல திரும்பி அவள் கூந்தலிலிருந்து முதுகில் சொட்டிக்கொண்டிருந்த நீரை உள்ளங்கை ஏந்தி சேகரித்தான். பின் மெல்ல கண்மூடி அந்நீரைப் பருகினான். “ தாகம் கொண்ட விலங்கின் உதடுகள் அவை “. அவளது திரண்ட தோள்களில் நடுங்கிக்கொண்டிருந்த நீர் முத்துக்களை சுட்டுவிரல் கொண்டு துடைக்கத் தொடங்கினான். வானம் செந்நிறம் கொள்ளத்தொடங்கியது. பின் அவள் பாதங்களை எடுத்து மடியில் கிடத்திக்கொண்டு சொன்னான் “ உன் காயங்கள் ஆறி வருகிறது “. அவள் சொன்னாள் “ நீ காயங்கள் அற்றவன் “.மெல்லிய புன்னகை ஒன்றை தவழவிட்டபடி குனிந்து அவள் பாத விரல்கள் ஒவ்வொன்றாய் வருடி முத்தமிட்டான். 



அவன் அப்படித்தான். மிகுந்த ரசனைக்காரன், எதிலும் நிதானம் தவறாதவன். காட்டு முயலை சுட்டு சமைக்கையிலும் தன் தனித்த ரசனையை,ருசியை அதில் ஏற்றிவிடவல்லவன். ஒருமலரை நுகர விரும்பினாலும் இதழ் இதழாக மென்மையாக வருடி, அதன் மகரந்தப்பரப்புகளை முத்தமிட்டு பின் நுகர்ந்து ரசிப்பான்.  உச்சிக்கொம்புத்தேன் கிடைக்கும் நாளில் அடையோடு எடுத்து தின்பவன் அல்ல அவன். தேக்கு மரத்தின்  தளிர் இலையைக் கிண்ணம் போல் செய்து அதில் தேனை பிழிந்து கொள்வான். பின் அவளை ஆற்றங்கரைக்கு அழைத்துப்போய் நீரை ஒட்டிஇருக்கும் பாறையில் இருவருமாக அமர்ந்துகொண்டு பாதங்களை நீருக்குள் இருக்குமாறு வைத்துக்கொள்ளச் சொல்வான். பிறகு ஒரே ஒரு துளி தேனை நுனிநாக்கில் சொட்டி சுவைக்கச்சொல்லுவான். பாதங்களில் குறுகுறுத்து ஓடும் சில்லென்ற ஆற்றுநீரும் நுனிநாக்கில் கரையும் கொம்புத்தேனும் தேவ சுகத்தை தரும் நேரம் அது. பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேனை சுவைத்து முடிப்பார்கள். அவன் ரசனையே அலாதி..



அவள் பாதங்களை முத்தமிட்டு நிமிர்ந்தவன் அவள் தொடுத்து வைத்திருந்த மலர்மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான். ஜோடிக்கிளிகள் கத்திக்கொண்டு வந்து மரக்கிளையில் அமர்ந்தன. கிளிகளை அவள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அவள் கழுத்து நரம்பில் விரல் வருடிச் சொன்னான் “ உன் ஆடைகள் மிகவும் கந்தல் ஆகிவிட்டது “. பௌர்ணமி நிலவு திரண்டு எழுந்து தன் பால்வண்ண ஒளியை வனமெங்கும் பரப்பத் தொடங்கிய நேரம் அது. அவள், “ இன்று நிலவை பார்த்தாயா? அதன் ஒளி “ வெண்பட்டு விரிப்பு போல இருக்கிறதல்லவா?! “ என்றாள். அவன் ஆம் என்று தலையசைத்து “நாம் இருவரும் அவ்வெண்ணிலாவின் ஒளியை இவ்விரவில் ஆடையாக அணிவோமா?" என்றான். செந்நிற மீன்கள் மேல்எழுந்து அவள்  இரு கன்னங்களிலும் துள்ளத் தொடங்கியது. அவள் தனது வலது பாதத்தின் பெருவிரலால் அவன் மென்மயிர் படர்ந்த மார்பில் மெல்ல அழுத்தி சிரித்துவிட்டு எழுந்து ஓடமுயன்றாள். தொலைவில்  ஒரு யானை தன் வலிய துதிக்கை கொண்டு மூங்கில் புதர்களை வளைத்து இழுத்துச் சுவைத்துக்கொண்டிருந்தது. 



 சிரிப்பொலி வனமெங்கும் பட்டுத்தெறிக்க வனம் குதூகலம் கொண்டது. பறவைகள் கூவித்திளைத்தன. காற்று சுழன்று வீச மரங்கள் தலை சிலுப்பி ஆடின. விலங்கினங்கள் தங்கள் இணை சேர விளைந்தன. திருவிழாக்காலத்து தேர் தெருவைப்போல் கலவையான ஒலியில் காடு கள்  வெறி கொண்டது. தூறலில் தொடங்கிய மழை வேகம் கொண்டு அடைமழையாய் கொட்டித்தீர்த்தது.  நிலவின் மல்லிகை ஒளியில் அவள் அவனது மச்சங்களைக் கண்ட அவ்இரவில்தான் அவனது  தழும்புகளையும் காண நேர்ந்தது. அவனும் வடுக்களோடு வாழ்பவனே . வனம் கண்ட மிகுமழை, களைத்து ஓய்கையில் கதிரவன் காடேறி வந்தான். தன் மெல்லிய ஒளிக்கரங்களால் துவண்டிருந்த உயிர்களின் தேகம்தொட்டு வருடத்தொடங்கினான். 



                           ******* 

செ.சுஜாதா.
நன்றி: மலைகள்.காம்.





Tuesday, May 6, 2014

சிறகுகள்





எப்போது ஒன்று மறுக்கப்படுகிறதோ அப்போது தான் அதன் மேல் அதிகப்படியான  ஆசையும், ஆர்வமும் தூண்டப்படும். அதுவரை தூக்கம் என்பதை தினசரி நிகழ்வாக கடந்துபோய்க் கொண்டிருந்த எனக்கு பத்தாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்த நாளில் அபூர்வமாய் கிடைக்கும் ஒன்றாக ஆனது. நாள் முழுதும் வகுப்பில் படித்தது போதாதென்று மாலையில் பள்ளி முடிந்து ஒரு டீ சாப்பிட்ட கையோடு மீண்டும் பாடம் தொடங்கிவிடும். இரவு உணவு இடைவேளை முடிந்து மீண்டும் பாடம். அதுவும் அதே வகுப்பறைக்குள். அமைதியாக படித்தால் நாம் நிஜமாகவே படிக்கிறோமா என்று சந்தேகம் வரும் ஆகையால் வாய்விட்டு வேறு படிக்கவேண்டும். கத்தி கத்தி படித்து,களைத்து, உறக்கத்தை கண் நிறைய தேக்கிக்கொண்டு சுவர் கடிகாரத்தை பரிதாபமாக பார்த்து ,நகராத அதன் முட்களை சபித்தபடி இருப்போம். கடிகாரத்தை நாம் பார்ப்பதை ஆசிரியை  பார்த்துவிட்டால் அவ்வளவு தான், அந்த ராத்திரியில் அடி பின்னி எடுத்துவிடுவார். அன்று மேலும் அரைமணி நேரம் அதிகம் படிக்கவேண்டிவரும்.



இப்படி தூக்கம் தொலைத்த ஒரு நாளில் தான் நடந்துகொண்டே தூங்கும் கலை தானாக என்னை வந்து சேர்ந்தது. நடந்தபடி படிக்க ஆசிரியை சொல்லும் நேரங்களில் புத்தகத்தை கையில் திறந்து வைத்துக்கொண்டு, கண்களை மூடி குனிந்தபடி நடக்கப்பழகி இருந்தேன். என் தோழிகளில் நான் தான் சிறியவள் ஆகையால் கொஞ்சம் செல்லம், கொஞ்சம் கண்டிப்பை தரும் தோழிகள். அய்யோ சுஜி தூங்கறாடி என்று பதறி, ஆசிரியை என்னை பார்க்காத வண்ணம் என்னை மறைத்தபடி குறுக்கே நடப்பதும், கையை மெதுவாக தொட்டு உலுக்குவதுமாக போராடிக்கொண்டிருப்பார்கள். இரவு 11 மணிக்கு ஓகே கேர்ள்ஸ் க்ளோஸ் யுவர் புக்ஸ் என்ற வாக்கியத்தை கேட்கும் நிமிடமே வாழ்நாளில் உச்சபட்ச சந்தோசமும், நிம்மதியும் தரும் நேரமாக அப்போது இருந்தது. சுருட்டி வைத்த படுக்கையை அப்படியே ஒரு எத்து எத்திவிட்டு வேரோடு சாயும் மரம் போல விழுந்தால் அடுத்த அரைமணி நேரத்தில் காலை 5 மணி ஆகி இருக்கும். அடப்பாவிகளா அதுக்குள்ள விடிஞ்சுடுச்சா ? பத்தாம் வகுப்பு ஆசிரியையே வந்து எழுப்புவதால் ஒரு நொடி கூட தாமதிக்க வழி இல்லை.



அன்று தொடங்கிய தூக்கத்தின் மீதான விருப்பம் இன்றுவரை தீரவே இல்லை. கல்லூரியில் விடுதி அறையில் எல்லோரும் செமஸ்டருக்கு விடிய விடிய படித்துக் கொண்டிருக்கையில் நான் மட்டும் நடுவில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பேன். விடிய விடிய படித்தவளும் நானும் ஒரே சதவிகிதத்தில் தான் மதிப்பெண் வாங்குவோம் ஆகையால் நீ தெரியாம படிக்கிற, ஹாலிடேஸ் ல வீட்ல படிச்சுட்டு வர என்று என்மேல் அவர்களுக்கு எப்போதும் சந்தேகம் உண்டு. இன்றும் எத்தனை மன பாரமானாலும் அரை மணி நேரம் நன்றாக அழுது தீர்த்துவிட்டு, முகம் கழுவிக்கொண்டு போய், நிமிடத்தில் படுத்து உறங்கிப்போவேன்.



என் மகள் 10 ஆம் வகுப்புக்குள் நுழைத்திருக்கிறாள். ஏப்ரல் 1 மீண்டும் பள்ளி தொடங்கிவிட்டது. மதியம் வரை வகுப்பு, பின் நீச்சல் பயிற்சி முடிந்து வந்ததும் அடுத்த ஒருமணி நேர ஓய்வுக்கு பின் மீண்டும் கணித, அறிவியல் வகுப்புகள் என்று ஓடத்தொடங்கிவிட்ட அவள் இன்று அம்மா , ஸ்விம் பண்ணினதே டயர்டா இருக்கு மா, i want to sleep என்று சொல்லி வண்டியில் போகும்போதே தோளில் சாய்ந்து கொண்டாள். சரி வீட்டுக்கு போய்விடலாமா என்றால், இல்ல இல்ல கிளாஸ் மிஸ் ஆகிடும் என்று சொல்லி கண்களில் தூக்கத்தை ஏந்திக்கொண்டே வகுப்புக்குள் ஓடி விட்டாள். பார்க்கவே பாவமாகவும், மிகுந்த குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. தமிழ் நாட்டை ஒப்பிடுகையில் இங்கு கொஞ்சம் கெடுபிடி குறைவு தான் என்றபோதும் இப்படி நுரை தள்ள ஓடி நாம் சேரப்போகும் இடம் எது? அது தான் வாழ்தலின் அர்த்தம் காணும் இடமா ? நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைத்தபின்னும் நம் உள்ளே புரண்டுகொண்டிருக்கும் வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்ப ? முகத்திற்கு முன்னே கட்டித்தொங்கவிடப்பட்ட கேரட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக்கு பாதையோர பசும் புற்கள் எப்படிப் புலப்படும்?!



                                                   *****************